நோய் தீர்க்கும் மூலிகைகளை வீட்டிலும் வளர்க்கலாமே!
அதிகரித்து வரும் மக்கள் தொகை, வாகனங்கள்- தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை முதலியவற்றால் மாசடையும் காற்று, இயந்திரமயமாகிவிட்ட வாழ்க்கையால்


அதிகரித்து வரும் மக்கள் தொகை, வாகனங்கள்- தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை முதலியவற்றால் மாசடையும் காற்று, இயந்திரமயமாகிவிட்ட வாழ்க்கையால் மன அமைதியின்மை, இளவயதிலேயே ஆட்கொள்ளும் சர்க்கரை நோய், இதய நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது பாரம்பரிய மூலிகை மருத்துவம்.
சாதாரண தலைவலி தொடங்கி சளி, காய்ச்சல், சிக்குன் குன்யா, வைரஸ் காய்ச்சல், புற்றுநோய் உள்ளிட்டவைகளை பாரம்பரிய மூலிகை மருந்துகளைக் கொண்டு சரிசெய்துவிடலாம்.
நம்மூர் தோட்டத்தில் வயல் வரப்புகளில் எல்லாம் மூலிகை செடிகளைக் காண முடியும். எந்த வித பக்க விளைவுகளும் இல்லாத இந்த மூலிகைகளுக்கு வெளிநாடுகளில் ஏக கிராக்கி. சிலர் மூலிகை செடிகளை வளர்த்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து நல்ல லாபம் பார்க்கின்றனர்.
நமது பாரம்பரிய மூலிகைகளின் மகத்துவத்தை, மக்கள் அறிந்து விழிப்புணர்வு பெற்று வீட்டு தோட்டத்தில் வளர்த்து பயன்பெறும் வகையில் இயற்கை வேளாண்மை முறையில் "கிரீன் கோவை' என்ற திட்டத்தை ஆனைகட்டியில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆர்ஷ வித்யா குருகுலத்தின் "ஏய்ம் ஃபார் சேவா' அமைப்புச் செயல்
படுத்தி வருகிறது.
கடந்த 2002ல் தொடங்கப்பட்ட இந்த மூலிகைப் பண்ணை சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் மலைகள் மத்தியில் பரந்து விரிந்துள்ளது."கிரீன் கோவை' திட்டத்தின் கீழ் 75 வகை அரிய மூலிகைகள் நாற்றாங்காலில் வளர்க்கப்பட்டு வருகின்றன. லாப நோக்கில்லாமல் நடத்தப்பட்டு வரும் இந்த மூலிகைப் பண்ணை, இயற்கை வேளாண்மை முறையில் உள்ளூர் பழங்குடியின மக்களை கொண்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மூலிகை செடி அருகே அதன் சமஸ்கிருதப் பெயர், ஆங்கிலப் பெயர், தமிழ்ப் பெயர், தாவரவியல் பெயருடன் அவை எந்த நோய்க்கு மருந்து எனவும் குறித்துப் பலகையில் அச்சடித்து வைக்கப்பட்டுள்ளது.
""இந்த அரிய மூலிகைப் பண்ணையை யானைகள், மான்கள், மயில்கள், காட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பாற்றி பராமரிப்பது பெரிய சவாலான விஷயமாகும்'' என்கிறார் "கிரீன் கோவை' திட்ட அலுவலர் ராமன் ஜி.
வெட்டிவேர்: வெட்டிவேர் வெறும் வாசனை எண்ணெய் மட்டும் தயாரிக்கப் பயன்படுவதில்லை. மண் அரிப்பைத் தடுக்கும் என்பதால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு குறைவு.
பாசுமதி இலை: பாசுமதி மூலிகை இலையை சிங்கப்பூர், மலேசியாவில் உள்ளவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த இலையை சாதாரண அரிசியில் போடும்போது பாசுமதி அரிசி போன்று நல்ல வாசனை வரும்.
பிரியாணி மசாலாவுக்கு சர்வசுகந்தி: நம்மூர் பிரியாணிகளில் கிராம்பு, ஏலம், பட்டை, சோம்பு, கசா கசா உள்ளிட்ட 13 வகையான மசாலாக்கள் சேர்க்கப்படுகின்றன. ஆனால், ஆல் ஸ்பைஸ் என்ற ஒரே ஓர் இலை போதும். இந்த இலையை உலர்த்தி பொடி செய்து பிரியாணியில் தூவினால் போதும். கமகம பிரியாணி ரெடி. மசாலா செலவும் மிச்சம். கூந்தலுக்குத் தேவையான எண்ணெய் தயாரிக்க தேவைப்படும் வெள்ளை, மஞ்சள் கரிசலாங்கண்ணியும் இந்த மூலிகைப் பண்ணையில் பயிரிடப்பட்டுள்ளது.
மாரடைப்புக்கு அருமருந்து மருதமரம்: மருதமரம் என்றும், அர்ஜுனா மரம் என்றும் இந்த மூலிகை அழைக்கப்படுகிறது. மாரடைப்பை தடுக்க இந்த மூலிகையின் பட்டை மாத்திரையாகச் செய்து தரப்படுகிறது. இந்த மாத்திரை அர்ஜுனா என்று கடைகளில் விற்கப்படுகிறது. செண்பகம் என்ற மரத்தில் இருந்து வாசனை எண்ணெய், வாசனை திரவியம் தயாரிக்கப்படுகிறது.
பல்வலி தீர்க்கும் அக்கலகாரம்: அக்கலகாரம் என்ற அரிய மூலிகை செடியில் உள்ள ஒரு பூ பல்வலியை உடனடியாக நிறுத்தும் சக்தி கொண்டது.
இனிப்புமிக்க ஸ்டீவியா இலை: சாதாரண சர்க்கரையை விட 50 மடங்கு அதிக இனிப்பு கொண்டது ஸ்டீவியா மூலிகை இலை. சர்க்கரை நோயால் அவதிப்படுவோர் ஸ்டீவியா என்ற மூலிகை செடியின் இலையை சர்க்கரைக்குப் பதிலாக சேர்த்துக் கொள்ளலாம்.
வண்ணத்துப்பூச்சியை வசீகரிக்கும் தேள் கொடுக்கு: தேளின் வாலில் உள்ள கொடுக்கு போன்ற வடிவில் இந்த மூலிகை செடி இருக்கும். தேள் கடிக்கு விஷமுறிவு மருந்தாக உள்ளது. இந்த மூலிகை இருக்கும் இடத்தில் வண்ணத்துப்பூச்சிகள் ஏராளம் சுற்றித்திரியும். கர்ப்பமாக உள்ள வண்ணத்துப்பூச்சிகளுக்குத் தேவையான கால்சியம் சத்து இந்த தேள் கொடுக்கு மூலிகையில் உள்ளது என்ற தகவல் ஆச்சர்யப்பட வைக்கிறது.
நித்யகல்யாணி: நித்ய கல்யாணி என்ற மூலிகை புற்றுநோயைக் கட்டுப்படுத்தும். இந்த மூலிகை செடி ஜெர்மனி நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சீமையகத்தி என்ற மூலிகை செடி தோல் நோய்களுக்கு நல்ல மருந்து.
பெப்பர் மின்ட் செடி: "போலோ' மிட்டாய் சாப்பிட்டால் என்ன சுவை இருக்குமோ அதை இந்த பெப்பர் மின்ட் செடி வாசனை தருகிறது. இந்த மூலிகையில் இருந்து தான் "போலோ' மிட்டாய் தயாரிக்க தேவையான மூலப்பொருள் கிடைக்கிறது.
யானைகளின் காய்ச்சலை தீர்க்கும் மூலிகைகள்: சீந்தில் கொடி, பவளமல்லி போன்ற மூலிகைகளை காய்ச்சல் வரும்போது கஷாயம் செய்து சாப்பிட்டால் வந்த காய்ச்சல் ஓடிவிடும். சீந்தில்கொடி இலைகளை தான் யானைகள் காய்ச்சலுக்கு சாப்பிடுமாம். அதேபோல ரோஸ் மேரி என்ற மூலிகை இலை வாசனை திரவியம் தயாரிக்க வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இந்த இலையைப் போட்டு டீ சாப்பிட்டால் மனச்சோர்வு நீங்கி உடனே உற்சாகம் கிடைக்கும்.
புற்றுநோய் தீர்க்கும் எலுமிச்சை புல்: "லெமன் கிராஸ்' எனப்படும் எலுமிச்சை புல் புற்றுநோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
சொர்க்கமரம் என்ற சைமரூபா: அமெரிக்க கண்டத்தில் உள்ள எல் சல்வடார் என்ற நாட்டில் இருந்து வந்துள்ள மரம். இதன் விதையில் உள்ள எண்ணெய்யை சூரியகாந்தி எண்ணெய்யைப் போல சமையலுக்குப் பயன்படுத்தலாம். சமீபத்தில் இதன் இலை புற்றுநோய்க்கு நல்ல மருந்து என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூட்டுவலிக்கு மருந்து: "பாமரோசா' என்ற ஒரு வகை புல்லில் இருந்து ஜெரேனால் ஆயில் தயாரித்து வாசனை திரவியம் செய்யப்படுகிறது. இந்த மூலிகை எண்ணெய் மூட்டு வலிக்கு அருமருந்து.
நிலவேம்பு: சிக்குன் குன்யா, பன்றிக்காய்ச்சலுக்கு நில வேம்பு குடிநீர் நல்ல நிவாரணி.
கொசு விரட்டி சிட்ரனெல்லா: எந்த வித பக்கவிளைவில்லாத இயற்கை கொசு விரட்டி மூலிகை சிட்ரெனல்லா. இந்த மூலிகை மருந்தில் இருந்து கொசு விரட்டி தயாரிக்கப்படுகிறது. கிரீன் கோவை திட்டத்தில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கொசு விரட்டி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
நெற்பவளம்: நெற்பவளம் என்ற மூலிகை செடியில் இருந்து கிடைக்கும் விதையை ருத்ராட்சம் போல கழுத்தில் அணிந்து கொள்வதன் மூலம் உடம்பில் உள்ள இறந்த செல்கள் அகன்றுவிடும். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலர் இந்த விதையை கழுத்தில் அணிவதால் நோயின் தாக்கம் குறைகிறது.
வெப்பாலை, நீலி அவுரி: இந்த மூலிகை செடிகள் தோல் நோயான சொரியாசிûஸ குணப்படுத்துகிறது. இந்தச் செடியில் இருந்து தான் ஹேர் டை தயாரிக்கப்படுகிறது. இயற்கை வண்ணம் தயாரிப்பதற்கான கலரும்
இதிலிருந்து தான் பெறப்படுகிறது.
அசோக மரம்: அருகி வரும் தாவரமான அசோக மரம். பெண்களுக்கு ரத்தப் போக்கை நிறுத்துவதற்கான "அசோகஅரிஷ்டம்' என்ற அரிய மருந்து இதில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. மூலிகைப் பண்ணையில் உள்ள 75 வகை மூலிகைகளில் ஒவ்வொரு மூலிகைகளும் வெவ்வேறு வித நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது. இயந்திரமயமாகிவிட்ட வாழ்க்கை முறையில் ஆங்கில மருத்துவத்தை நாடிச் செல்லும் நாம் வீட்டுத் தோட்டத்தில் இயற்கை முறையில் இந்த மூலிகை செடிகளை வளர்த்து, பாரம்பரிய மூலிகை மருத்துவத்தை மீட்டெடுப்பதே எங்கள் நோக்கம் என்றார் கிரீன் கோவை திட்ட அலுவலர் ராமன் ஜி.
நாமும் நேரில் சென்று இந்த மூலிகைகளை பார்த்து நமது தோட்டங்களிலும் வளர்க்கலாமே!
கோவையில் இருந்து கேரளா மன்னார்காடு செல்லும் சாலையில் 23 கி.மீட்டர் தொலைவில் ஆனைகட்டி மலைப்பகுதியில் அமைந்துள்ளது இந்த மூலிகைப்பண்ணை.
மேலும் விவரங்கள் அறிய 94426 46713.
- ஆர்.ஆதித்தன்
படங்கள்: ஆர்.சிவக்குமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...